×

குருகிராமில் மசூதிக்கு தீ; அரியானா வன்முறை பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு; ஊரடங்கு உத்தரவு அமல்

சண்டிகர்: அரியானா வன்முறை பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.அரியானாவில் நூஹ் மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நேற்றுமுன்தினம் புனிதநீர் எடுத்து வந்த யாத்திரையை மற்றொரு சமூகத்தினர் தடுத்து நிறுத்த முயன்றதில் வன்முறை வெடித்தது. இதில், 120 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல்துறையினரின் 8 கார்கள் உள்பட 50 வாகனங்கள் மற்றும் கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த வன்முறையில் ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 போலீசார் உள்பட 4 பேர் மற்றும் குருகிராம் பகுதி மசூதிக்கு தீ வைத்ததில் 19 வயதான துணை இமாம் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 காவலர்கள் உள்பட மொத்தம் 80 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
நூஹ் பகுதியில் முதல்நாள் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நூஹ் மாவட்டத்தில் வன்முறையினால் பாதித்த பகுதியை மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் நேற்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நூஹ்வில் நிலைமை இன்னும் சீராகவில்லை. பதற்றம் நீடிக்கிறது. இரு சமூகத்தினரும் அமைதியாக வாழ்ந்து வந்தனர். இந்த அமைதியை சீர்குலைக்கவே இந்த வன்முறை சம்பவம் திட்டமிடப்பட்டுள்ளது. 20 கம்பெனி அதி விரைவு படையை ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது,’’ என்று தெரிவித்தார். இதனிடையே, உள்துறை அமைச்சர் அனில் விஜ், முதன்மை செயலர், அரசு மற்றும் டிஜிபி, ஏடிஜிபி காவல்துறை மூத்த அதிகாரிகள் உடன் வன்முறை பாதித்த நூஹ் நிலைமை குறித்து முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, “இந்த வன்முறை மிகப் பெரிய சதி திட்டம் போல் தோன்றுகிறது. யார் குற்றவாளியாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில் கலவரத்தை தூண்ட சதி நடந்துள்ளது. இந்த வன்முறை தொடர்பாக 44 எப்ஐஆர் பதியப்பட்டு 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,’’ என்று தெரிவித்தார். இதற்கிடையே, நேற்று குருகிராமில் உள்ள அஞ்சுமன் ஜமா மசூதிக்கு 60 பேர் கொண்ட வன்முறை கும்பல் தீ வைத்ததில் மசூதியின் துணை இமாம் மவுலானா சாத் (19) உயிரிழந்தது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீது எப்ஐஆர் பதிவுச் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. நேற்று வன்முறை கும்பல், குருகிராமில் பாட்ஷாபூரில் உள்ள உணவகத்துக்கு தீ வைத்தது. அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடியது. பின்னர், அப்பகுதியில் உள்ள மசூதி முன்பு நின்று `ஜெய் ராம்’ என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

The post குருகிராமில் மசூதிக்கு தீ; அரியானா வன்முறை பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு; ஊரடங்கு உத்தரவு அமல் appeared first on Dinakaran.

Tags : Mosque ,Gurugram ,Ariana ,Chandigarh ,Vishwa Hindu Parishad ,Nuh district ,Dinakaran ,
× RELATED இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பிரதமர் மோடி...